அரபிக்கடலில் ஈரானிய “நிழற்கப்பற்படை”யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு கப்பலை அமெரிக்க கடற்படை சனிக்கிழமை வழிமறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட அறிக்கையின்படி, சர்வதேச தடைகளை மீறி ஈரானின் எரிசக்தி மற்றும் எண்ணெய் பொருட்களை கடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்ட கப்பலே இந்த நடவடிக்கையில் இலக்காகியுள்ளது.
“Seven” என அடையாளம் காணப்பட்ட இந்த கப்பல், அமெரிக்கப் படைகளின் உத்தரவின்படி பாதுகாப்புடன் ஈரானை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடைமறிப்பு, USS Pinckney (DDG-91) கப்பலில் இருந்து புறப்பட்ட உலங்கு வானூர்தி மூலம் மேற்கொள்ளப்பட்டதாக CENTCOM குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் உத்தரவுகளுக்கு இணங்க, குறித்த கப்பல் தற்போது திசைமாற்றம் செய்யப்பட்டு ஈரானை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான அமெரிக்க தடைகள் தொடர்ந்து கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாக CENTCOM வலியுறுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இது 37வது இடைமறிப்பு நடவடிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
