வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சுமார் 49,000 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 125 ஆண்டுகளில் வெனிசுலாவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி யாராகுய் (Yaracuy) மாநிலத்தின் சான் பெலிப் (San Felipe) மற்றும் யுமாரே (Yumare) பகுதிகளுக்கு அருகில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கராகஸ் மற்றும் லா குயிரா பகுதிகளில் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. கராகஸில் உள்ள உயர்தர கட்டிடங்களும் சான் பெலிப் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லா குயிராவில் உள்ள சிமோன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்ததால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களும் சேதமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து வெனிசுலா அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மெக்சிகோ, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் மீட்புக் குழுக்களையும் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வருகின்றன. அமெரிக்கா மட்டும் சுமார் 150 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவியையும் கடற்படை மற்றும் வான்படை ஆதரவையும் அறிவித்துள்ளது.
சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதும், தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதும் மீட்புப் பணிகளை சவாலாக்கியுள்ளது.
இதற்கிடையில் 200-க்கும் மேற்பட்ட பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மருத்துவமனைகள் ஏற்கனவே மருந்து தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
