ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாகவும், இது மேற்கு ஐரோப்பாவிலிருந்து ஜெர்மனி மற்றும் போலந்து உள்ளிட்ட கிழக்கு பகுதிகளுக்கு பரவி தீவிரமடைந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஜூன் மாதத்திற்கான வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், பிரான்சில் அதீத வெப்பத்தால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியின் சார்ப்ரூக்கன் பகுதியில் ஆரம்பக் கணக்கெடுப்பின்படி வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை (106°F) எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அசாதாரண காலநிலை காரணமாக தொடருந்து தண்டவாளங்கள் மற்றும் வீதிகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சில போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், மின் உற்பத்தி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளிமண்டலத்தில் உருவாகும் “ஒமேகா பிளாக்” (Omega Block) எனப்படும் வானிலை நிகழ்வே இந்த வெப்ப அலை ஒரே இடத்தில் நிலைத்து நிற்க காரணமாக இருப்பதாகவும், மனிதச் செயற்பாடுகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
