உலகக் கால்பந்து கிண்ணத் தொடரின் ‘H’ பிரிவு லீக் போட்டியில் உருகுவே மற்றும் கேப் வேர்ட் அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையைப் பதிவு செய்தன.

மியாமியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21ஆவது நிமிடத்தில் கேப் வேர்ட் அணியின் கெவின் பினா முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த உருகுவே அணி முதல் பாதியின் இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடியது. 44ஆவது நிமிடத்தில் எம். அரவுஜோ கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். தொடர்ந்து முதல் பாதி கூடுதல் நேரத்தின் 6ஆவது நிமிடத்தில், அரவுஜோ வழங்கிய பந்தை ஏ. கனோபியோ கோலாக மாற்றினார்.
இதன் மூலம் முதல் பாதி முடிவில் உருகுவே அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வர கேப் வேர்ட் அணி தீவிரமாக போராடியது. அதன் பலனாக 61ஆவது நிமிடத்தில் ஹெலியோ வரேலா அபாரமான கோல் ஒன்றை பதிவு செய்து கணக்கை 2-2 என சமப்படுத்தினார்.
அதன்பின்னர் இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை. இதனால் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.
