இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையின் விற்பனையை முற்றாகத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பதிவாகும் புற்றுநோய்களில் வாய் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதால், அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத் தெரிவித்துள்ளார்.
புகையிலை கலந்த வெற்றிலையை பயன்படுத்துவது வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக மருத்துவ ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சட்டங்களின்படி, புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்தல், விநியோகித்தல், கையிருப்பில் வைத்திருத்தல் அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்துதல் ஆகிய அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
இந்தச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், வர்த்தகர்களும் பொதுமக்களும் சட்டங்களை மதித்து செயற்படுவதுடன், புகையிலை கலந்த வெற்றிலையை தயாரித்து அல்லது விற்பனை செய்து சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
