
நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)யிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.
இந்த முறைப்பாடு, ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியைச் சுற்றி உள்ளது.
போட்டியின் போது, மைதான டிஜே மூலம் “தோசை… இட்லி… சாம்பார்… சட்னி…” என்ற வரிகள் கொண்ட பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடப்பட்டது. இது தமிழ்நாட்டின் கலாசார அடையாளங்களையும், சென்னை அணியையும் பகடி செய்யும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக CSK தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.
எதிரணியையோ அல்லது ஒரு மாநிலத்தின் அடையாளங்களையோ இழிவுபடுத்தும் வகையில் இத்தகைய செயல்கள் இடம்பெறுவது விளையாட்டின் ஒழுக்கத்திற்கும் தர்மத்திற்கும் எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து BCCI விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானங்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் தொடர்பாக கடுமையான விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
