
நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை நேரங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களாலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
