
லண்டனில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் காலநிலை விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் Shirley Ayorkor Botchweyயை லண்டனிலுள்ள மார்ல்பரோ மாளிகையில் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடினார்.
லண்டனில் இன்று ஆரம்பமான ‘கற்றலுக்கான பொதுநலவாய’ அமைப்பின் 43ஆவது ஆளுநர் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, பொதுநலவாயக் கட்டமைப்பிற்குள் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதுடன், இலங்கையுடனான பொதுநலவாய அமைப்பின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்குப் பிரதமர் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், காலநிலை மாற்றம், காலநிலை நிதி, ஜனநாயக ஆட்சிமுறை, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பு வழங்கும் ஆதரவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நிலையான வளர்ச்சியும் உள்ளடக்கிய ஆட்சிமுறையும் தொடர்பான இலங்கையின் அர்ப்பணிப்பை பிரதமர் வலியுறுத்திய நிலையில், தொழில்நுட்ப உதவி, திறன் மேம்பாட்டு திட்டங்கள், காலநிலை நிதி மற்றும் தேர்தல் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக பொதுநலவாய பொதுச் செயலாளர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமால் சேனாதீர உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
