காவல்துறை பெயரில் சமூக வலைத்தள மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

கொழும்பு: காவல்துறை அதிகாரிகளின் பெயர், புகைப்படம் மற்றும் போலி அடையாளங்களை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறைத் தலைமையகம் எச்சரித்துள்ளது.

காவல்துறையினரின் புகைப்படங்களை பயன்படுத்தி, குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளில் போலி கணக்குகள் உருவாக்கி, குழுக்களாக இணைந்து நிதி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது காவல்துறையின் விசாரணைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்கின்றனர்.

வங்கிக் கணக்கு அல்லது வங்கிக் அட்டை பணமோசடியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தி, இரகசிய விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி போலி காவல்துறை ஆவணங்கள், அடையாள அட்டைகள் மற்றும் அதிகாரிகளின் புகைப்படங்களையும் அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்த முயலுகின்றனர்.

மேலும், கணக்குகளை “சரிபார்க்க” அல்லது “முடக்கப்பட்ட கணக்கை மீளச் செயல்படுத்த” வேண்டும் எனக் கூறி OTP இலக்கங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் கடவுச்சொற்களைப் பெற்றுக்கொள்வதுடன், வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றுமாறும், USDT உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணம் செலுத்துமாறும் வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், ATM அட்டை இலக்கம், CVV, கடவுச்சொல் அல்லது OTP இலக்கங்களை ஒருபோதும் கோருவதில்லை என்பதால், இத்தகைய கோரிக்கைகள் அனைத்தும் மோசடியானவை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், “கணக்கு முடக்கப்படும்”, “வழக்குத் தொடரப்படும்” போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எந்தவொரு கணக்கிற்கும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும், சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தின் மூலம் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக் காவல்துறை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலங்கை மத்திய வங்கி தனிப்பட்ட வாட்ஸ்அப் இலக்கங்கள் மூலம் விசாரணைகளை நடத்துவதில்லை என்றும், பணம் வைப்புச் செய்ய வங்கிக் கணக்கு இலக்கங்களை வழங்குவதும் இல்லை என்றும் காவல்துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் எழுத்துமூலமாக வழங்கப்படுவதுடன், அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே சீருடை அணிந்த அதிகாரிகள் நேரில் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் இதுபோன்ற போலி ஆவணங்கள், இணைப்புகள் அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கோ அறிவிக்குமாறும், அறிமுகமற்ற நபர்கள் அனுப்பும் இணைய இணைப்புகள் மற்றும் போலி பரிசு அறிவிப்புகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு விசாரணைக்காகவும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பணம் கோருவதில்லை என்றும், காவல்துறை அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் குறித்து உடனடியாக தகவல் வழங்குமாறும் காவல்துறைத் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top