யாழ்ப்பாணம்: போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அரச துறையினர் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வலியுறுத்தியுள்ளார்.
புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (21) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பணியகத்தின் செயற்பாடுகள் மாவட்ட மட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித்துக்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீள்சமூகமயப்படுத்துதல், அவர்களை சரியான பாதையில் வழிநடத்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு குறித்து செயலமர்வில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதைக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், புனர்வாழ்வு பெற்றவர்களை சமூகத்தில் மீண்டும் இணைத்து தொடர்ந்து வழிநடத்துவது மிகவும் அவசியம் என்றார்.
ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் “அழகான வாழ்க்கை – போதைப்பொருளற்ற தேசம்” தேசிய வேலைத்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைய தலைமுறையினரை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் என்றும், புனர்வாழ்வு பெற்றவர்களை குறைந்தது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து சமூகத்தில் நிலையாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உளவள ஆலோசகர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயற்பட்டால் போதைப்பொருள் பாவனையை மேலும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அந்த நிலையை தொடர்ந்து பேணவும் மேம்படுத்தவும் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அழைப்பு விடுத்தார்.
