
நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் 455 முதியோர் இல்லங்கள் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 10,000-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், பல முதியோர் இல்லங்கள் இதுவரை முறையான பதிவின்றி இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய விதிமுறைகளின் கீழ், அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் கட்டாய பதிவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பராமரிப்பு தரம், பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஹொரணை அங்குருவாத்தோட்டையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட எட்டு முதியவர்கள் கதிர்காமம் அரச முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த தீ விபத்தில் 12 வயோதிபர்கள் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், குறித்த முதியோர் இல்லம் உத்தியோகபூர்வ பதிவின்றி இயங்கி வந்தமை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
