
அந்தார்டிக்காவின் வடமேற்கு வெடெல் கடல் பகுதியில், எகிப்தின் கிசா பிரமிடு அளவுக்கு ஒப்பிடத்தக்க புதிய தீவு ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
‘போலார்ஸ்டெர்ன்’ எனப்படும் பனிக்கப்பலில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் ஆய்வில் ஈடுபட்டிருந்த 93 பேர் கொண்ட குழுவினர், கடும் புயல் காரணமாக ஒரு பகுதியில் தற்காலிகமாக தஞ்சமடைந்தபோது இந்த நிலப்பரப்பைக் கவனித்தனர்.
முதலில், இது ஒரு “அழுக்கடைந்த பனிப்பாறை” (Dirty Iceberg) என தவறாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் ட்ரோன் ஆய்வுகள் மூலம் இது உண்மையில் முழுமையான தீவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.
சுமார் 165 அடி அகலமும், 426 அடி நீளமும் கொண்ட இந்த தீவு, கடல் மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில் உள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட கடல்சார் வரைபடங்களில், இந்த பகுதி “அறியப்படாத ஆபத்துகள் நிறைந்த வலயம்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்பரப்பு முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்ததால், செயற்கைக்கோள் படங்களிலும் இது சாதாரண பனிப்பாறையாகவே தோன்றி மறைந்திருந்தது. இதுவரை பெயரிடப்படாத இந்த தீவை அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் சேர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
