நீர்கொழும்பு பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் வேடமிட்டு நடமாடிய நபர் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
போலியான நபர்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் திருச்சபை கேட்டுக் கொண்டுள்ளது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவத்தின் போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர் இயேசு கிறிஸ்துவைப் போன்ற உடை மற்றும் தோற்றத்தில் நீர்கொழும்பின் பல பகுதிகளில் சென்றுள்ளார்.
அவர் கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் அவரை இயேசு என நினைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவர் நீர்கொழும்பு Grand Street தேவாலயத்திற்குச் சென்றுள்ளார். நிலைமையை உணர்ந்த மதகுருக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று அவரை அங்கிருந்து வெளியேற்றியதாகவும், பின்னர் அவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து போலியானவர்களை நம்பாமல் இருக்க வேண்டும் என்றும், பைபிளில் கூறப்பட்ட உண்மைகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
