
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் தொடர்பாக காவல்துறை முக்கிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்பட கசிவு தொடர்பாக கடந்த 11ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேகநபர்கள் தமிழ்நாடு இணையவழி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர் சுயாதீன உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. அவர் வேறு ஒரு திரைப்படத்தின் பணியில் இருந்தபோது, படத்தொகுப்பு கூடத்தில் இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தரவுகளை அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளார்.
அவ்வாறு திருடப்பட்ட தரவுகளே பின்னர் இணையத்தில் சட்டவிரோதமாக பகிரப்பட்டுள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விஜய் நடித்த கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தணிக்கை பிரச்சினைகளால் வெளியீடு தாமதமாகியிருந்தது. இந்த சூழலில் ஏற்பட்ட கசிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக கசிந்துள்ள இப்படத்தை பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
