
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கிய பங்காற்றிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் உளவுத்துறை அமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கெகிராவ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதிலும் நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதிலும் முக்கிய பங்காற்றிய அதிகாரிகள் தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தார்.
மேலும், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட சிலருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
உளவுத்துறை அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகள், கடந்த காலத்தில் இடம்பெற்ற சில அரசியல் சூழல்களை நினைவுபடுத்துவதாகவும், இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளின் செயற்பாட்டு திறனை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எதிர்காலத்தில் பாதுகாப்பு சவால்களை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
