
வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், குடிவரவுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை அமல்படுத்தியிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இத்தகைய கட்டணத்தை விதிப்பது சட்டபூர்வமற்றது என பொஸ்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த கட்டண உயர்வு, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு நிபுணர்களை பாதிக்கும் என பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இந்த முடிவை எதிர்த்து அமெரிக்காவின் 20 மாநிலங்களின் சட்டமா அதிபர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த கட்டணம் சட்டவிரோதமான வரி விதிப்புக்கு ஒப்பானது எனக் குறிப்பிட்டுள்ளது.
தீர்ப்பை வரவேற்ற மனுதாரர்கள், அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் சர்வதேச திறமையாளர்களின் வாய்ப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு எதிரான முக்கிய வெற்றியாக இதை விவரித்துள்ளனர்.
எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
