
மும்பை இந்தியன்ஸ்அணியின் தொடர்ச்சியான பின்னடைவை ஒரே நபரிடம் சுமத்துவது சரியல்ல என்று இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.
அணியின் தலைவரான ஹர்திக் பாண்டியா மீது மட்டும் குற்றச்சாட்டைச் சுமத்த முடியாது என்றும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்களும் தங்களது பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்துள்ளது. Sunrisers Hyderabad அணிக்கு எதிரான போட்டியில் 243 ஓட்டங்கள் எடுத்தபோதும் அதை பாதுகாக்க முடியாதது அணியின் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இந்த நிலையில் கருத்து தெரிவித்த இயன் பிஷப், “ஒரு அணியின் தோல்விக்கு ஒரே நபரை மட்டும் காரணமாகக் கூற முடியாது. தலைவர் திட்டங்களை வகுத்தாலும், வீரர்கள் களத்தில் செயல்படவில்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை” என்றார்.
மேலும், சூர்யகுமார் யாதவ் 8 போட்டிகளில் 20 சராசரியுடன் 162 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளதும், ஜஸ்பிரித் பும்ரா 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் மட்டுமே பெற்றுள்ளதும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ICC Men’s T20 World Cup 2026 போட்டியில் விளையாடிய பின்னர் போதிய ஓய்வின்றி ஐபிஎல் தொடரில் களமிறங்கியிருப்பது வீரர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற மீதமுள்ள 6 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
