உழைப்பவரே உயர்ந்தவர்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளையும் தியாகங்களையும் போற்றும் நாளாக சர்வதேச தொழிலாளர் தினம், அல்லது மே தினம், ஆண்டுதோறும் மே மாதம் 1 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இது சாதி, மதம், இன வேறுபாடுகளைத் தாண்டி உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் முக்கியமான நாளாக திகழ்கிறது.

19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் தினமும் 12 முதல் 16 மணி நேரம் வரை கடுமையாக உழைக்க வேண்டிய நிலை நிலவியது. இந்த அநீதிக்கெதிராக 1886 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
“எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம்” என்ற கோரிக்கையை முன்வைத்து நடந்த இந்தப் போராட்டம் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஏற்பட்ட வன்முறையில் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.
அந்தத் தியாகத்தை நினைவுகூரும் வகையில் 1889 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சர்வதேச சோசலிச மாநாட்டில் மே 1 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய சூழலில், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு தேவைகள் இன்னும் தொடர்கின்றன. உடல் நலத்துடன் இணைந்து மனநலனும் முக்கியம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ற பணிச்சூழலை உருவாக்குவது காலத்தின் தேவை எனப் பார்க்கப்படுகிறது.
மே தினம் என்பது வெறும் விடுமுறை நாளல்ல; அது தொழிலாளர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நலன்களை உறுதி செய்யும் ஒரு நினைவுநாளாகும்.
