
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 10ஆவது ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இலகுவான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
இந்த வெற்றிகளுடன் குழு 1 இல் தோல்வியின்றி விளையாடி வரும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதிப்படுத்தும் நிலைக்கு மேலும் வலுப்பெற்றுள்ளன.
இந்தியா 95 ஓட்டங்களால் வெற்றி
லீட்ஸ் ஹெடிங்லேயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்ம்ரித்தி மந்தனா (74), ஷபாலி வர்மா (55) ஆகியோர் தொடக்க விக்கெட்டில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான அடித்தளத்தை அமைத்தனர். பின்னர் ரிச்சா கோஷ் 20 ஓட்டங்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் நெதர்லாந்து அணிக்காக கெரோலின் லெங்கே 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 17.3 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 95 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்திய பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்கள், ஷபாலி வர்மா 3 விக்கெட்கள், நந்தனி ஷர்மா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். ஸ்ம்ரித்தி மந்தனா ஆட்டநாயகியாக தெரிவு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியா இலகு வெற்றி
இதே மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் அவுஸ்திரேலியா பங்களாதேஷை 9 விக்கெட்களால் வீழ்த்தியது.
பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்களுக்கு 77 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. நிகார் சுல்தானா 27 ஓட்டங்கள், ரிட்டு மோனி 16 ஓட்டங்கள் எடுத்தனர்.
பந்துவீச்சில் கிம் கார்த், எலிஸ் பெரி மற்றும் சொஃபி மொலினொக்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
பதிலுக்கு அவுஸ்திரேலியா 9.3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்களை எடுத்து எளிதாக வெற்றியடைந்தது. ஜோர்ஜியா வொல் 45 ஓட்டங்களுடனும் எலிஸ் பெரி 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
