
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீராக்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க பலனை அளிக்கவில்லை என கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘கண்ட்ரோல் ரிஸ்க்ஸ்’ ஆலோசனை நிறுவனத்தின் கடல்சார் பாதுகாப்பு இயக்குநர் கோர்மாக் மெக்காரி, பிபிசியின் ‘ரேடியோ 4’ நிகழ்ச்சியில் பேசுகையில், தற்போதைய நிலைமை முன்னையதைப் போலவே தொடர்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் நிலைமை பரபரப்பாக இருந்தாலும், களத்தில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பகுதியின் வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனில், கடற்படை மற்றும் வான்வழிப் படைகள் ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்பு ஒரு சாதாரண நாளில் சுமார் 135 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற நிலையில், தற்போது வணிகக் கப்பல் போக்குவரத்து மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா சில கப்பல்களை வழிநடத்திச் சென்றதாக கூறினாலும், அது ஈரான் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவிற்கு ஒரு பெரிய தந்திரோபாய சவாலாக மாறியுள்ளது என நிபுணர் மெக்காரி எச்சரித்துள்ளார்.
