ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற படகில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்தப் படகு நேற்று (02) மீன்பிடி நடவடிக்கைக்காக ஹிக்கடுவ துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும், பின்னர் அதில் இருந்த 53 வயதுடைய மீனவர் ஒருவர் காணாமல் போனதாகவும் படகின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போனவர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ஆறு மீனவர்களைக் கொண்ட குழுவாகச் சென்ற இவர்கள், சுமார் 15 கடல் மைல் தொலைவில் இருந்தபோது சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு உணவு உட்கொள்ளத் தயாரான போது குறித்த மீனவர் காணாமல் போனது தெரியவந்ததாகவும், பின்னர் உடனடியாக படகின் உரிமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
