
இலங்கைக்கு வடகிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (12) மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின் கீழ், 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (Red Alert), மேலும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் (Amber Alert) அறிவிக்கப்பட்டுள்ளன.
பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
