
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அதன்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்த விஜய், அவருக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். இதன்போது வைகோ தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் விஜய் அவரது இல்லத்தில் சந்தித்தார். விஜய்யை சந்தித்த சீமான், அவரை அன்புடன் கட்டியணைத்து வரவேற்றதாக கூறப்படுகிறது.
அதேவேளை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தனது இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை நேரில் வாசலில் சென்று வரவேற்றார். பின்னர், தனது குடும்பத்தினரையும் விஜய்க்கு அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பல்வேறு அரசியல் தலைவர்களை விஜய் சந்தித்து வருவது, தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
