
அமெரிக்காவின் எச்-1பி (H-1B) விசா திட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. விசா கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 90 லட்சமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
எச்-1பி விசா ஆண்டுதோறும் 85,000 பேருக்கு வழங்கப்படுகிறது. முன்பாக இந்த விசாவிற்கான தேர்வு லொட்டரி முறையில் நடைபெற்றாலும், புதிய விதிகளின் கீழ் உயர் ஊதிய வேலைகளுக்குத் தகுதியானவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, லொட்டரி முறையில் சிலருக்கு பல முறை வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றங்களின் விளைவாக, ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில், இவ்வாண்டு 2.35 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், தேர்வு செய்யப்படும் வாய்ப்பு முன்பு இருந்த 33 சதவீதத்திலிருந்து தற்போது சுமார் 75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், அதிக கட்டணச் சுமை காரணமாக அமெரிக்க நிறுவனங்களும் விண்ணப்பதாரர்களுக்கான நிதி ஆதரவை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மீது முதலீடு அதிகரித்துள்ளதால், தொடக்கநிலை ஊழியர்களை விட அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமிக்கும் போக்கு உருவாகியுள்ளது.
இந்த கட்டண உயர்வு மற்றும் விதிமுறை மாற்றங்களுக்கு எதிராக பல வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
