
லிந்துலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்றபோது காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள், ஓல்ரிம் பகுதியில் உள்ள கொத்மலை ஆற்றுக்கு நீராடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நீராடிக் கொண்டிருந்தபோது, 9 மாணவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், 15 வயதுடைய ஒரு மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், லிந்துலை காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போன மாணவரைத் தேடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
