மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள கடைத் தொகுதிகளில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, தீயணைப்பு படையினரும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதிகாலை சுமார் 5.00 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பற்றியதையடுத்து, தீ அருகிலிருந்த மற்றொரு கடைக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், காத்தான்குடி நகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக தீயணைப்பு பிரிவினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் ஒரு கடை முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றொரு கடை கடுமையாக சேதமடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டு, மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
