இலங்கையை வாட்டும் வறட்சி: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழப்பு

எல் நினோ தாக்கத்தால் நிலவும் கடும் வறட்சி காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார்.

மொனராகலை, பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த வாழ்வாதாரப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

வறட்சியின் தாக்கத்தால் விவசாயம், பெருந்தோட்டம், கடற்றொழில், சுயதொழில், வணிகம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, விவசாயத் துறையில் 12,304 குடும்பங்களைச் சேர்ந்த 36,875 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் துறையில் 2,333 குடும்பங்களைச் சேர்ந்த 7,889 பேரும், மீன்பிடித் துறையில் 2,107 குடும்பங்களைச் சேர்ந்த 7,491 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சுயதொழில் துறையில் 1,769 குடும்பங்களைச் சேர்ந்த 6,039 பேரும், கால்நடை வளர்ப்புத் துறையில் 2,966 குடும்பங்களைச் சேர்ந்த 9,408 பேரும் வாழ்வாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும், வணிகத் துறையில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேரும், ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 3,450 குடும்பங்களைச் சேர்ந்த 10,297 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பல்வேறு வாழ்வாதாரத் துறைகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top