ஈ. ஜீன் கேரொல் வழக்கு: ட்ரம்ப்பின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம்

எழுத்தாளர் ஈ. ஜீன் கேரொலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்க உத்தரவிட்ட சிவில் வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மீண்டும் பரிசீலிக்கக் கோரிய மனுவை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கேரொல் வழக்கில் ட்ரம்ப்புக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பரிசீலிக்க அமெரிக்க உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் மறுத்திருந்தது. இதையடுத்து, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரம்ப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், நீதிமன்றம் எந்தவொரு விளக்கமும் இன்றி அந்தக் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில், கேரொல் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவரை அவதூறாகப் பேசியதாகவும் ட்ரம்ப் பொறுப்பாளி என நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக கேரொலுக்கு 5 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. ட்ரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மறுத்து வந்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தற்போதைய முடிவைத் தொடர்ந்து, குறித்த 5 மில்லியன் டொலர் தீர்ப்பு இறுதியானதாகியுள்ளது. வட்டியுடன் சேர்த்து சுமார் 5.6 மில்லியன் டொலர் தொகையை ட்ரம்ப் ஏற்கனவே செலுத்தியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கேரொலுக்கு மேலும் 83.3 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கு தொடர்பான ட்ரம்ப்பின் மேல்முறையீடு இன்னும் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. அந்த வழக்கில், ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் வெளியிட்ட கருத்துகளுக்கு தனக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பதாக ட்ரம்ப் தரப்பு வாதிடுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top