
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தின் 60 நாள் காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுடனான நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், ஈரான் தனது இராணுவத்தை “முழுமையான தாக்குதல்” நிலைக்கு மாற்றத் தயாராகி வருவதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை எதிர்கொள்ள துல்லியமான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 17ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின் 60 நாள் காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சை காரணமாக ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்தத்தை நீடிக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் தொடர்பாக ஈரான் ஓமானுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையில் ஓமான் இடையூறு ஏற்படுத்தினால், அந்நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் காரணமாக பிரெண்ட் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 89 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டெப் நீரிணை பகுதிகளில் ஏமனின் ஹவுதி அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களும் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
