நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறை அமைப்பு சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் காணப்படுகிறது.

எனினும், புதிய சட்டமூலத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் நாள் அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நாள் ஆகிய இரண்டில் முதலில் வரும் நாளில் ஓய்வுபெற வேண்டும் என்ற ஏற்பாடும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு உட்படுத்தி முடிப்பதுடன், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை தொடர்ந்தும் பயன்படுத்துவதே இந்த மாற்றங்களின் பிரதான நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top