திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3.1 கிலோகிராம் எடையுடைய பாரிய சிறுநீரகக் கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
52 வயதுடைய ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. சுமார் 21 சென்டிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் எடையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்போது கண்டறியப்பட்டது.

சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிக்கலான இந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாகுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பிரேசிலில் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல் தொடர்பான சாதனைப் பதிவுகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், திருகோணமலையில் அகற்றப்பட்ட கல்லின் எடை மற்றும் அளவு தொடர்பான மருத்துவ ஆவணங்களை சர்வதேச பதிவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும், தற்போது சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
