
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை முதல் அடுத்த சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று பகல் நேரத்தில் கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களில் மக்கள் அதிக வெப்பத்தை உணரக்கூடிய நிலை காணப்படும்.
சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேலும், ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, புத்தளம் மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடல் பிராந்தியங்களுக்கான முன்னறிவிப்பு
நீர்கொழும்பு முதல் கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் அந்தக் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
அதேபோல், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையும், சிலாபம் முதல் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் அந்தக் கடற்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
