ஈரான் தாக்குதலுக்கு ரஷ்யா உதவியதா? அமெரிக்க உளவுத்துறை தீவிர ஆய்வு

வாஷிங்டன்: வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பு (CIA) தளங்கள் மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதல்களில், ரஷ்யா தொழில்நுட்ப உதவி அல்லது இலக்கு நிர்ணயத் தகவல்களை வழங்கியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த நான்கு நபர்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

தகவல்களின்படி, கடந்த மார்ச் மாதம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமைந்துள்ள CIA நிலையம் மற்றும் ஈராக் கிழக்குப் பகுதியில் உள்ள மற்றொரு CIA தளம் உள்ளிட்ட குறைந்தது இரண்டு இடங்கள் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இந்தத் தாக்குதல்களின் துல்லியமான செயல்முறை, பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஈரானுக்கு ரஷ்யா வழங்கி வரும் இராணுவ தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில், ரஷ்யாவின் பங்கு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்க உளவுத்துறை விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மேற்கத்திய அதிகாரிகளின் தகவலின்படி, சவூதி அரேபியாவில் இடம்பெற்ற தாக்குதலில் ரஷ்யாவால் மேம்படுத்தப்பட்ட Shahed ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதல் ட்ரோன் தூதரகத்தின் வெளிச்சுவரில் துளையிட்டதுடன், இரண்டாவது ட்ரோன் அந்த வழியாக நுழைந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

மேலும், ஈரானின் ட்ரோன்களின் இலக்குத் துல்லியத்தை அதிகரிக்க ரஷ்யா தொழில்நுட்ப உதவி வழங்கியிருக்கலாம் என்றும், சமிக்ஞைத் தடைகளை எளிதில் சமாளிக்கக்கூடிய Kometa-M செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பும் ஈரானிடம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா தற்போது ஈரானுடன் தொடர்புடைய பதற்ற நிலையை கட்டுப்படுத்த முயற்சித்து வரும் சூழலில், CIA போன்ற முக்கிய உளவுத்துறை தளங்களை குறிவைக்கும் தாக்குதல்களில் ரஷ்யாவின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டால், அது அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைக்கு குறிப்பிடத்தக்க சவாலாக அமையக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், சில பாதுகாப்பு நிபுணர்கள், தாக்குதல் அமெரிக்கத் தூதரக வளாகத்தையே பொதுவாகக் குறிவைத்திருக்கலாம்; CIA நிலையம் தற்செயலாக தாக்கப்பட்டிருக்க வாய்ப்பும் உள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், CIA, ரஷ்யா மற்றும் ஈரான் தரப்பிலும் உடனடி அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top