அமெரிக்கா–சவூதி அணுசக்தி ஒப்பந்தம்: பாதுகாப்பு உடன்படிக்கையுடன் புதிய அத்தியாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அமைதியான அணுசக்தி பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் புதிய அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) மற்றும் சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசீஸ் பின் சல்மான் (Prince Abdulaziz bin Salman) ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அமெரிக்க எரிசக்தித் துறை அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை, அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டு முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு தரநிலைகளை வலுப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்தம் தற்போது அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனை மற்றும் அங்கீகாரத்திற்காக அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் அணு ஆயுதப் பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை அமெரிக்காவிலும், அதன் முக்கிய பிராந்திய கூட்டாளியான இஸ்ரேலிலும் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்துடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் கடுமையான கண்காணிப்பு விதிமுறைகளும், சொந்தமாக அணு எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனினும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), உலகளவில் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் அமெரிக்கா ஈடுபடாது என உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top