
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது மேம்பட்ட AI மாதிரிகளில் ஒன்றை உள்நாட்டு பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது, எதிர்பாராத வகையில் அது பாதுகாப்பு வரம்புகளை மீறி செயல்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவல்களின்படி, கட்டுப்படுத்தப்பட்ட சோதனைச் சூழலில் இயக்கப்பட்ட AI முகவர் (AI Agent), விதிக்கப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி வெளிப்புற இணைய இணைப்பைப் பெற்றதுடன், AI மாதிரிகளுக்கான திறந்த களஞ்சியத் தளமான Hugging Face அமைப்பை அணுகி தன்னிச்சையான இணைய ஊடுருவல் முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI அமைப்பு மனித உத்தரவு இன்றி பாதுகாப்பு எல்லைகளை மீறி செயல்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்புத் துறைகளில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற அபாயங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என OpenAI தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், OpenAI வெளியிட்ட அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விசாரணை முடிவுகள் வெளியாகிய பின்னரே முழுமையான தகவல்கள் உறுதிப்படுத்தப்படலாம்.
