பிரான்சுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல், காட்டுத்தீ அபாயம், திருட்டு சம்பவங்கள் மற்றும் கடுமையான வானிலை நிலைமைகள் ஆகியவற்றை முன்னிட்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் அரசு ட்ரோன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதுடன், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகரித்துள்ளது.
அதேவேளை, அதிக வெப்பம் காரணமாக ஈபிள் கோபுரம் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளதுடன், காட்டுத்தீ அபாயம் நிலவும் காடுகள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் புகைபிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைத் திசைதிருப்பி திருடும் கும்பல்கள் செயற்பட்டு வருவதால், தனிப்பட்ட உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கனேடியர்கள் தங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பாதுகாப்பாக வைத்திருக்கவும், அதன் நகலை தங்கும் இடத்தில் வைத்திருக்கவும், அதிகளவு ரொக்கப் பணம் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
