இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை (1.2 மில்லியன்) கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 12 வரை நாட்டிற்கு மொத்தம் 1,217,956 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை 1 முதல் 12 ஆம் திகதி வரையிலான 12 நாட்களில் மட்டும் 71,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்தவர்களில் அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் எண்ணிக்கை 16,610 ஆகும். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் 7,296 சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா 4,656 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்த ஆண்டின் மொத்த வருகை அடிப்படையில் பார்த்தாலும், 310,293 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 115,863 பேரும், சீனாவிலிருந்து 80,487 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி பதிவாகியுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 279,328 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
