
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 7 தனித்துவமான விசாரணைக் குழுக்களும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
வன்முறையின்போது CCTV கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் DVR பதிவுக் கருவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. அவை தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஆயுதங்களும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சில கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள், அதற்கு உள்ளக ரீதியில் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
