வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

அமர்வுகளின் போது, புதன்கிழமையைத் தவிர்ந்த ஏனைய நாட்களில் முற்பகல் 10.00 மணி முதல் 11.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் மற்றும் நிலையியற் கட்டளை வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று பிரதமரிடம் கேள்வி எழுப்புவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தொல்பொருட்கள் கட்டளைச்சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான விதிகள் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது.
கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகள் சட்டமூலம், மோட்டார் வாகன ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதங்களுக்குப் பின்னர், புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்த எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு வேளை விவாதமும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதைத் தடுக்கும் மூன்று முக்கிய சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடும் விவாதிக்கப்பட உள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான உரிமம் வழங்கல், பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பு, பாடசாலைகளில் ஆரோக்கியமற்ற உணவு விற்பனைக்கு தடை விதித்தல் மற்றும் யாழ்ப்பாண அபிவிருத்தி உள்ளிட்ட தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
