வவுனியா மாநகர சபையில் இருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட செங்கோல், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள தளவாட தயாரிப்பு நிலையம் ஒன்றிலிருந்து அந்த செங்கோல் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பின்னர் மாநகர சபையின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மாநகர சபையிலிருந்து செங்கோல் எவ்வாறு தளவாட தயாரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் தொடர்கின்றன. இதுகுறித்து காவல்துறை விளக்கமளிக்கையில், செங்கோலின் திருத்தப் பணிகளுக்காகவே அது குறித்த தளவாட நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
முன்னதாக, மாநகர சபையின் பொறுப்பிலிருந்த செங்கோல், அடையாளச் சின்னம் மற்றும் மாநகர முதல்வருக்கான ஆடை ஆகியவை காணாமல் போயுள்ளதாக செயலாளர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், முன்னாள் மாநகர முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட சந்தேகநபர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
