
இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில், புதிய நேரடி விமான சேவையை ஆரம்பிக்க வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் ஹோ சி மின் நகரத்திற்கும் கொழும்பிற்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவை இயக்கப்படவுள்ளது.
வியட்நாமின் தேசிய விமான சேவை நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய வழித்தடம், நிறுவனத்தின் 2026 கோடைக்கால சர்வதேச விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ் இரண்டு புதிய ஏர்பஸ் விமானங்களை சேவையில் இணைப்பதுடன், தாய்லாந்தின் புகெட் நகருக்கான புதிய விமான சேவையையும் பல சர்வதேச வழித்தடங்களில் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நேரடி விமான சேவை, இலங்கையின் வான்வழிப் போக்குவரத்து துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும் என வியட்நாம் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
