
கடந்த சில மாதங்களாக மேற்காசியாவில் நிலவிய பதற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 அம்சங்களைக் கொண்ட இடைக்கால புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்சின் வேர்சாய் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் இந்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த பங்காற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது, பொருளாதாரத் தடைகள் தொடர்பான தளர்வுகளை பரிசீலிப்பது மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு தரப்பும் 60 நாட்கள் காலப்பகுதிக்குள் விரிவான இறுதி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முன்னேற்றம் மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
