
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஆசிரியை நிலைதடுமாறி கீழே விழுந்து, பஸ்ஸின் பின்சக்கரத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பூனாவை கல்கந்தேகம வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த 56 வயதுடைய ஆசிரியையென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
