அரசாங்கத்தின் முறையான அங்கீகாரத்தைப் பெறாத எந்தவொரு திட்டமும் அல்லது செயற்பாடும் எந்தக் காரணத்திற்காகவும் பாடசாலைகளுக்குள் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை வளாகத்தில் நேற்று (17) நடைபெற்ற வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், கல்வி தொடர்பான அனைத்து தீர்மானங்களும் மாணவர்களின் சிறந்த நலனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வடமத்திய மாகாணத்தின் கல்வி அபிவிருத்தித் திட்டங்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை இலக்குகள் தொடர்பான முன்னேற்றங்கள், மாகாண மற்றும் வலய மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைப்பது தொடர்பான நடவடிக்கைகள், ஆசிரியர் மற்றும் மாணவர் நலன்புரி, நிர்வாகச் சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
கல்வியின் தரத்தை பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பிட முடியாது எனக் குறிப்பிட்ட பிரதமர், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கல்வி மற்றும் மாணவர் வளர்ச்சி சார்ந்த செயற்பாடுகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
