
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதூவ நுழைவாயில் பகுதியில் நேற்று (08) மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து காலி நோக்கி பயணித்த சொகுசு தனியார் பேருந்து, பின்னதூவ நுழைவாயிலில் வெளியேற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தூணொன்றில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் பிரேக் அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன், அதிவேக நெடுஞ்சாலை அவசர மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு காலி கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், நெடுஞ்சாலை நுழைவாயில் கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
