அதிகப்படியான வாட் (VAT) வரி விதிப்பு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தங்க ஆபரணச் சந்தை கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தகர்களின் கூற்றுப்படி, அண்மைக் காலங்களில் தங்க நகை விற்பனை சுமார் 75 சதவீதம் வரை குறைந்துள்ளதுடன், நாட்டின் பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றான தங்க ஆபரண உற்பத்தித் துறை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
தற்போதைய வரி அமைப்பின் கீழ், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் பெறுமதிக்கும் ஆபரண தயாரிப்பு வேலைக்கூலிக்கும் சேர்த்து 18 சதவீத வாட் வரி அறவிடப்படுவதுடன், மேலதிகமாக 2.5 சதவீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியும் விதிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், இதில் சுமார் 82,000 ரூபாய் வரியாக செலுத்தப்படுவதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த கூடுதல் செலவு நுகர்வோரின் கொள்முதல் திறனை பாதித்துள்ளதால், தங்க நகை விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையை மாற்றுவதற்காக, புறக்கோட்டை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் நிதி அமைச்சகத்திடம் புதிய முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் பெறுமதிக்கு விதிக்கப்படும் வாட் வரியை நீக்கி, ஆபரணத் தயாரிப்புக்கான வேலைக்கூலிக்கு மட்டுமே VAT மற்றும் சமூக பாதுகாப்பு வரியை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
வர்த்தகர்களின் கணிப்பின்படி, ஒரு பவுன் தங்கத்தின் தற்போதைய விலையில் பெரும்பகுதி சர்வதேச சந்தை மதிப்புக்காக செலவிடப்படுவதால், தங்கத்தின் அடிப்படை பெறுமதிக்கு விதிக்கப்படும் வரியை நீக்குவது விலையை குறைத்து, விற்பனையை அதிகரிக்க உதவும்.
மேலும், வரிவிதிப்பைக் குறைப்பதன் மூலம் விற்பனை அதிகரித்து, அரசாங்கத்திற்கும் நீண்டகாலத்தில் அதிக வரி வருவாய் கிடைக்கக்கூடும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உள்நாட்டு தங்க நகைத் துறையைப் பாதுகாக்கவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், இந்த வரி அமைப்பில் உடனடி மாற்றம் அவசியம் என புறக்கோட்டை வர்த்தக சமூகம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
