
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் காணப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடல் பிராந்தியங்களுக்கு எச்சரிக்கை
சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் மறு அறிவிப்பு வரையிலும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
