
பிரித்தானிய மாணவர் ஹென்றி நோவக் கொலைச் சம்பவத்தை குடியேற்றவாசிகளுடன் தொடர்புபடுத்தி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லேமி தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது ஜே.டி. வான்ஸிடம் இதுகுறித்து விளக்கமளித்த டேவிட் லேமி, கடந்த ஆண்டு 18 வயதான ஹென்றி நோவக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய பிரஜையான விக்ரம் திக்வா என்பதையும், அந்தக் குற்றத்திற்கும் குடியேற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தனது மகனின் மரணத்தை சமூகத்தில் வெறுப்பு அல்லது பிரிவினையை தூண்டுவதற்குப் பயன்படுத்த வேண்டாம் என்று ஹென்றி நோவக்கின் தந்தை விடுத்திருந்த வேண்டுகோளையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதாம்ப்டனில் 18 வயதான மாணவர் ஹென்றி நோவக், 23 வயதான விக்ரம் திக்வாவால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்தின் பின்னர், தன்னை இனரீதியாகத் தாக்கியதாக விக்ரம் திக்வா பொலிஸாரிடம் தவறான தகவல்களை வழங்கியிருந்தார். இதனை நம்பிய பொலிஸார், காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நோவக்கிற்கு கைவிலங்கிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் பிரித்தானியாவில் பொலிஸ் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களையும் போராட்டங்களையும் தோற்றுவித்திருந்தது.
கொலைக்குற்றத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட விக்ரம் திக்வாவுக்கு கடந்த வாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது ‘X’ சமூக ஊடகப் பதிவில், “ஐரோப்பிய தலைவர்கள் குடியேற்றவாசிகளின் பெருமளவான வருகையை கட்டுப்படுத்தத் தவறியதே இந்த மரணத்திற்குக் காரணம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அந்தக் கருத்து சம்பவத்தின் உண்மைத் தகவல்களுடன் பொருந்தாதது என பிரித்தானிய அரசாங்கம் தற்போது வலியுறுத்தியுள்ளது.
