ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை எல்லைக்கு அண்மையில் உள்ள இஸ்ரேலின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிற்றூந்தில் பயணித்த நபர் ஒருவரால் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதுடன், உயிரிழந்தவர் 35 வயதுடைய பொதுமகன் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
மேற்குக்கரையின் கல்கிலியா நகருக்கு அருகிலுள்ள கொச்சாவ் யாயிர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து தப்பிச் சென்ற சிற்றூந்தை காவல்துறையினர் துரத்திச் சென்ற நிலையில், சந்தேகநபரான துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி மற்றும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும் நடவடிக்கையின் போது, அவர் கண்ணாடிப் போத்தலொன்றால் காவல்துறையினரைத் தாக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஐந்து பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேலின் அவசர மருத்துவ சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதல்தாரி, அரபு மக்கள் அதிகமாக வாழும் தாயிபே நகரைச் சேர்ந்த சுமார் 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாலஸ்தீன ஆயுத அமைப்பான ஹமாஸ் தாக்குதலை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ள போதிலும், அதற்கான பொறுப்பை ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
