2029ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி பதவியை அநுர குமார திஸாநாயக்கவே மீண்டும் வகிப்பார் என அமைச்சர் வசந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரோமேஷ் தரங்க வீசும் ஈட்டியைப் போலவே, தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் இலக்கும் துல்லியமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களின் நம்பிக்கையையும் வலுவான ஆணையையும் பெற்ற அரசாங்கமாக தற்போதைய நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசாங்கம் விரைவில் வீழ்ச்சியடையும் என சில தரப்பினர் எதிர்பார்த்து வருவதாகவும் கூறினார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகளின் அதிகரிப்பு போன்ற சவால்கள் காணப்பட்டாலும், அரசாங்கம் பொருளாதாரத்தை திறம்பட நிர்வகித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், உலக வங்கியின் ஊடாக தொடர்ந்து நிதி ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் சந்தையில் ஏற்பட்டுள்ள தேவையை கட்டுப்படுத்துவதற்காக சில தற்காலிக பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, தனிநபர் வாகன இறக்குமதிகளுக்கான தீர்வை வரி மூன்று மாதங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி 350 ரூபாயைத் தாண்டும் என சில தரப்பினரால் பரப்பப்பட்ட கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், தற்போது அது 340 முதல் 345 ரூபாய் வரையிலான மட்டத்தில் ஸ்திரமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
டொலரின் பெறுமதி உயர்வதால் மட்டும் அரசாங்கங்கள் வீழ்ச்சியடையாது என்றும், பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என கனவு காணும் அரசியல் தலைவர்கள் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலமும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களை அதிகரிப்பதன் மூலமும் நாட்டுக்குள் வரும் அந்நியச் செலாவணியை மேலும் உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
